ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை: ஆசனூர்- கொள்ளேகால் சாலையில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது; போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆசனூர், கொள்ளேகால் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆசனூர், கொள்ளேகால் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை தாளவாடி, தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, திம்பம், ஆசனூர், குளியாடா, பனக்கள்ளி மற்றும் வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி...
மேலும் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகாலுக்கு செல்லும் சாலையில் அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. அதுமட்டுமின்றி அந்த தரைப்பாலத்தின் அருகே இருந்த பழமை வாய்ந்த மரம் ஒன்று அடியோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த தரைப்பாலம் சேதம் அடைந்தது.
இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு நேற்று காலை முதலே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
5 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறை, ஊராட்சி துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தரைப்பாலத்தின் மேல் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதேபோல் அரேபாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு மரம் விழுந்தது. அதையும் பணியாளர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்ெதாடர்ந்து பகல் 11 மணி அளவில் போக்குவரத்து தொடங்கியது.
பலத்த மழை காரணமாக ஒங்கல்வாடி குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி அருகில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால் குளத்தின் மேல்புரத்தில் உள்ள கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி கிராமத்துக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டது. தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஓடை மற்றும் காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளமானது அனைத்தும் கர்நாடக மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்றது. அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் மழைநீரானது குளம் போல் தேங்கி நின்றது. இதனால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்,
கடம்பூர்
கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்று திரும்பியது. ஆனால் ஆபத்தை உணராமல் குரும்பூர் பள்ளத்தை மலைக்கிராம மக்கள் கடந்து சென்று வருகின்றனர்.
கடம்பூர் அடுத்த குன்றி செல்லும் தார்ரோடு தொடர் மழை காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் மலைக்கிராமத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் காலையில் இருந்து மதியம் வரை நேற்று வெயில் அடித்தது. இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று காலை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானிசாகர் - 77
சத்தியமங்கலம் - 28
குண்டேரிப்பள்ளம் - 25.4
கோபி - 21
வரட்டுப்பள்ளம் - 15.8
பவானி - 10.4
கொடிவேரி - 6.2
தாளவாடி - 4