கவுந்தப்பாடியில் பலத்த மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கவுந்தப்பாடியில் பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மழை
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கும், புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கடந்த 10-ந் தேதி கரையை கடந்தது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. குறிப்பாக கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
வீடு இடிந்து விழுந்தது
இந்த நிலையில் தொடர்மழை காரணமாக கவுந்தப்பாடியில் உள்ள சத்தியமங்கலம்- ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் எதிரே திரு.வி.க.வீதியில் மாது என்பவர் குடியிருந்து வந்த வீட்டின் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் தங்கி இருந்த மாது மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினர்.
இதைத்தொடர்ந்து இடிந்து விழுந்த வீட்டின் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த மேலும் 3 குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கினர்.