கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; மண்சரிவு-அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் நிலவி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலை முதலே கொடைக்கானல் மலைப்பகுதியில் மேகமூட்டமாக இருந்தது. மதியம் 2 மணிக்கு மேல் நகரின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.
கொடைக்கானல் லாஸ் காட்ரோடு, உகார்தேநகர், செண்பகனூர் உள்ளிட்ட சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மண்சரிவை பொக்லைன் எந்திரம் உதவியுடன் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
இதற்கிடையே தொடர் மழை காரணமாக நட்சத்திர ஏரியில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேறியது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் நகரை ஒட்டியுள்ள பாம்பார் அருவி, பியர் சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இந்த மழையால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே கனமழை காரணமாக கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். இந்த மழையை தொடர்ந்து மாலையில் இயல்பான சூழ்நிலை நிலவியது.