கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் நேற்று 3 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் நேற்று 3 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெயில் அடித்தது. மதியம் 1 மணிக்கு மேல் கொடைக்கானலில் கருமேகக்கூட்டங்கள் தரையிறங்கி மழை பெய்ய தொடங்கியது.
முதலில் மிதமான மழையாக பெய்த நிலையில், நேரம் செல்லச்செல்ல கனமழையாக கொட்டித்தீர்த்தது. மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை, மாலை 5 மணி வரை சுமார் 3 மணி நேரமாக வெளுத்து வாங்கியது. அதன்பிறகு லேசான சாரல் மழை இரவு வரை பெய்தது.
மலைப்பாதையில் மண்சரிவு
கனமழை காரணமாக, கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயகண்ணன் தலைமையில் நகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் மண் சரிவை சரிசெய்தனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
இதேபோல் மஞ்சூர் உள்பட சில இடங்களில் மரங்கள் வேரோடு சாலைகளில் சாய்ந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடங்களுக்கு சென்ற நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பிறகு மலைப்பாதைகளில் போக்குவரத்து சீரானது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
இதற்கிடையே கனமழையால் கொடைக்கானல் நகரில் ஏரிச்சாலை, நாயுடுபுரம் உள்பட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் நட்சத்திர ஏரி நிரம்பி அதிக அளவு உபரிநீர் வெளியேறியது.
இதன்காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை அருவி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு நேற்று வருகை தந்தனர். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் அவர்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். பலர் தங்களது வாகனங்களுக்கும், அறைகளுக்கும் திரும்பினர்.
கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், தரைப்பகுதியில் உள்ள பல்வேறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.