கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் பலத்த மழை


கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் நேற்று பலத்த மழை பெய்தது.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வாறுகாலில் அடைப்புகள் இருந்ததால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் ஓடியது.

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. அந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனங்கள் நிலைதடுமாறியவாறு தண்ணீரில் தத்தளித்தவாறு ஊர்ந்து சென்றன. மழைக்காலம் தொடங்கிய நிலையிலும் பல நாட்களாக பெய்யாத நிலையில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆறுமுகநேரி-சாத்தான்குளம்

ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் மிதமான மழை பெய்தது. அப்போது சாத்தான்குளம் பஜாரில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்தது. உடனே சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து சென்று, வனப்பகுதியில் விட்டனர்.

தென்திருப்பேரை, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.


Next Story