கோவில்பட்டியில் பலத்த மழை:ரெயில்வே சுரங்கவழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவதி
கோவில்பட்டியில் பலத்த மழை பெய்ததால் ரெயில்வே சுரங்கவழிப்பாதையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் காலை முதல் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென மேக மூட்டம் உருவானது. மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீரும், கழிவு நீரும் கலந்து ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து சென்றன. முக்கிய சாலைகளில் ஓடிய மழை நீர் இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழி பாதையில் தேங்கியது. அப்போது அந்த பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி கொண்டனர். தட்டுத்தடுமாறி அவர்கள் மோட்டார் சைக்கிளை உருட்டியவாறு வெளியேறினர். இதைஅறிந்த போக்குவரத்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று, ரெயில்வே சுரங்க வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர். சுமார் அரைமணிநேரம் மழை கொட்டி தீர்த்தது. இரவில் படிப்படியாக ரெயில்வே சுரங்க வழிப் பாதையில் மழை நீர் வடிந்த பின்னர் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.