குமரி அணைப்பகுதிகளில் கன மழை
ுமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது.
குலசேகரம்.
குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது.
மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும் திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை உள்பட அணைகளுக்கு தண்ணீர் உள் வரவு அதிகரித்துள்ளது.
44 அடியை எட்டும் பேச்சிப்பாறை
பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 43.61 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 608 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் பாசனக் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டும் நிலைக்கு உயர்ந்து காணப்பட்டது. இந்த அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்துள்ள நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு தொழில் பாதிப்படைந்துள்ளது.