திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு: குமரி மாவட்டத்தில் பலத்த மழை; அணைகளில் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்


திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு: குமரி மாவட்டத்தில் பலத்த மழை; அணைகளில் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றம்
x

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடித்து வருகிறது.

பலத்த மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி மழை பெய்து வருகிறது.

அதே போல் குமரி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை 11 மணி வரை வெயில் இருந்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டமாக மாறி மழை பெய்ய தொடங்கியது. நாகர்கோவிலில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டியது.

குடைபிடித்து சென்றனர்

நாகர்கோவில் மாநகரில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வெட்டூர்ணிமடம் சந்திப்பு, பார்வதிபுரம் பால்பண்ணை சாலை, டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம், கே.பி.ரோடு, கேப் ரோடு, அவ்வைசண்முகம் சாலை, டிஸ்லரி சாலை, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து சாலையில் பாய்ந்ததை காணமுடிந்தது.

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்ததால் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் கையில் குடை பிடித்தபடி நடந்து சென்றனர்.

வயல்களில் தண்ணீர் புகுந்தது

மார்த்தாண்டம், குலசேகரம், குளச்சல், பூதப்பாண்டி, கொட்டாரம், கன்னியாகுமரி, இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.

மேலும் மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் வயல்களிலும் தண்ணீர் புகுந்தது. அவற்றை விவசாயிகள் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மாநகரில் உள்ள சில சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால் அங்கு மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழையால், குமரி மாவட்டத்தில் பால்வெட்டும் தொழில் நேற்று பாதிக்கப்பட்டது. செங்கல் சூளை தொழில், கட்டிட தொழில் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டது.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னிமார் பகுதியில் 36.4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி- 3.3, கொட்டாரம்- 3, நாகர்கோவில்- 4, பெருஞ்சாணி- 2, பேச்சிப்பாறை- 1, தக்கலை- 3.4, குளச்சல்- 18.4, இரணியல்- 12.4, பாலமோர்- 10, மாம்பழத்துறையாறு- 2, கோழிப்போர்விளை- 2.4, முள்ளங்கினாவிளை- 8.4, ஆனைகிடங்கு- 2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 420 கனஅடி நீர் வந்தது. அது மாலையில் 5 ஆயிரத்து 466 கனஅடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 650 கனஅடி வந்தது. அது மாலையில் 1,854 கனஅடியாக உயர்ந்தது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 37 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 58 கனஅடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 6.6 கனஅடியும் தண்ணீர் வருகிறது.

உபரிநீர் வெளியேற்றம்

இந்தநிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரம் பேச்சிப்பாறை அணையில் இருந்து மாலையில் வினாடிக்கு 546 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1,020 கனஅடியும் உபரியாக திறந்து விடப்படுகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.


Next Story