மதுரையில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை
மதுரையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
மதுரை:
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டதால், மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலையிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. இருப்பினும் மாலை 6 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. அதன்படி கருமேகங்கள் ஒன்று திரண்டு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் வடக்குமாசி வீதியில் ஒரு பாதாள சாக்கடை மூடி உடைத்துக்கொண்டு ஊற்று போல் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை பெரியார் பஸ் நிலையம், எல்லீஸ்நகர் சாலை, காளவாசல், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. சனிக்கிழமை என்பதால் அலுவலகம் முடிந்து விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கொட்டும் மழையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது.