மதுரையில் பலத்த மழை
மதுரையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் கடுமையான வெயில் அடித்தது. அதன்படி, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து, மக்களை வாட்டி வதைத்தது.மாலை 6 மணியளவில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர், மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் தேங்கி நின்ற காட்சிகளையும் காணமுடிந்தது.
மாலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள், வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் என பரபரப்பாக மக்கள் சென்று கொண்டிருந்த வேளையில் மழை பெய்ததால் நகரின் முக்கிய இடங்களான பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதற்கிடையே, விநாயகர் சிலைகள் மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதால், அந்த பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.