ஓட்டப்பிடாரம் பகுதியில் கனமழை: பள்ளிக்கூடத்துக்குள் வெள்ளம் புகுந்தது


ஓட்டப்பிடாரம் பகுதியில் கனமழை:  பள்ளிக்கூடத்துக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழையால் பள்ளிக்கூடத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பெற்றோர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று குழந்தைகளை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழையால் பள்ளிக்கூடத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று தங்கள் குழந்தைகளை பெற்றோர் தூக்கிச்சென்றனர்.

பள்ளிக்கூடத்துக்குள் வெள்ளம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று மதியம் 12 மணியளவிலும் பலத்த மழை கொட்டியது.

இதனால் ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால், பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சிறிதுநேரத்தில் ஓடையை மூழ்கடித்து வெள்ளம் சென்ற நிலையில், பள்ளிக்கூட வகுப்பறைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பள்ளிக்கூட வளாகத்தில் இடுப்பளவு உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது.

குழந்தைகளை தூக்கிச்சென்ற பெற்றோர்

அப்போது பள்ளிக்கூடத்தில் சுமார் 80 மாணவ-மாணவிகள் இருந்தனர். உடனே அவர்களை ஆசிரியர்கள் உதவியுடன் பெற்றோர்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பெரும்பாலான குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது தோளில் தூக்கிச்சென்றார்கள். சில மாணவர்களை அங்குள்ள கோவில் வளாகத்திலும் தங்க வைத்து ஆசிரியர்கள் பாடங்களை பயிற்றுவித்தனர்.

இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, ஓடையில் உள்ள அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கூட வளாகத்தில் தேங்கிய தண்ணீரையும் வடிய வைக்க ஏற்பாடு செய்தனர்.

நெல்லையில் சாரல் மழை

நெல்லையில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. மாலை 4 மணி அளவில் லேசான மழை பெய்தது. இந்த மழை நீடித்தது. இதேபோல் முக்கூடல், பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.

தூத்துக்குடியில் மாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்தது.

தென்காசியில் நேற்று காலை 11 மணியளவில் சாரல் மழை தூறியது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

சேரன்மாதேவி -9, களக்காடு -1. ராமநதி -3, கருப்பாநதி -2, குண்டாறு -2, அடவிநயினார் -2, தென்காசி -1, சங்கரன்கோவில் -3, சிவகிரி -7.


Related Tags :
Next Story