திருமருகல் பகுதிகளில் பலத்த மழை
திருமருகல் பகுதிகளில் பலத்த மழை
திருமருகல் ஒன்றியத்தில் பெய்த பலத்த மழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.
கனமழை
திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திட்டச்சேரி, திருமருகல், பனங்குடி, அண்ணாமண்டபம், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், புத்தகரம், ஏனங்குடி போலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயலில் தேங்கியுள்ள மழை நீர் வடிய தாமதமாகிறது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
விவசாய பணிகள் பாதிப்பு
தொடர் மழையால் உர மருந்து தெளித்தல், களை எடுத்தல் உள்ளிட்ட விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.