தூத்துக்குடி வட்டாரத்தில் பலத்த மழை:காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
தூத்துக்குடி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தண்ணீரில் சிக்கியவர்கள் தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
பருவமழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை முதல் கடும் வெயில் மக்களை வாட்டியது. மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
வெள்ளம்
நேற்று முன்தினம் ஓட்டப்பிடாரம் பகுதியில் 62 மில்லி மீட்டரும், மணியாச்சியில் 72 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மேலும் சுற்று வட்டார பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளம் பல தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி சென்றது. நேற்று முன்தினம் இரவு மேலதட்டப்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் திடீரென வந்த வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கி தவித்தனர். அவர்கள் பாலத்தை கடக்க முடியாமல் தண்ணீரின் வேகத்தில் தவித்து கொண்டு இருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையா தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு கயிறு கட்டி பாலத்தின் நடுவில் தவித்துக் கொண்டு இருந்த குடும்பத்தினரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
மழை விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை, தூத்துக்குடியில் 5 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டம் 2, திருச்செந்தூர், காயல்பட்டினம், கயத்தாறு, கீழஅரசடி தலா ஒரு மில்லி மீட்டர், கோவில்பட்டி 19, கழுகுமலை 3, கடம்பூர் 6, எட்டயபுரம் 14, விளாத்திகுளம் 26, வைப்பார் 21, சூரங்குடி 15, வேடநத்தம் 20 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.