வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை


வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை
x

வேலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. வள்ளிலை பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

வேலூர்

இடி, மின்னலுடன் மழை

வேலூரில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரும் வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. 100 டிகிரிக்கு மேல் பதிவாகிய வெயிலின் அளவு சில நாட்களாக 100 டிகிரிக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. வேலூரில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இரவு 7.30 மணி அளவில் சாரல் மழை பெய்தது. பின்னர் பலத்த மழையாக உருவெடுத்து, இடி மின்னலுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.

வேலூர் -ஆற்காடு சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் குப்பைகள் சாலைக்கு வந்தது. ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்சால்பேட்டை, சேண்பாக்கம், திடீர்நகர் அரியூர் உமாபதி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரவில் பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்தது. மழையின் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

வள்ளிமலை

வள்ளிமலையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. அப்போது மேல்பாடி, பொன்னை பகுதிகளில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் அவ்வப்போது தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். வள்ளிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தாழ்வாக உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலை ஓரங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.

பொன்னை, வள்ளிமலை, மேல்பாடி, திருவலம் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் வேர்க்கடலை பயிர் செய்ய நிலத்தை உழுது பக்குவப்படுத்த மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்பாடி

காட்பாடி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 6.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் பலத்த மழை பெய்தது. கழிஞ்சூர், வஞ்சூர், ஜாப்ராபேட்டை, கரசமங்கலம், வண்டறந்தாங்கல், காட்பாடி, பிரம்மபுரம், காந்திநகர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. இரவில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.


Next Story