வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை எதிரொலி: மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வௌ்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியம் மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக நேற்று காலை மூலவைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக மூலவைகை ஆறு வறண்டு காணப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் வெள்ள நீர் புகுந்ததால் குடிநீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.