பலத்த மழை; மரங்கள் முறிந்து விழுந்தன
கூடலூரில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலையின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த மே மாதம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோடை விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டது. இதேபோல் பாகற்காய் உள்பட கோடைகால பயிர்களின் விவசாயமும் தடைபட்டது.
நடப்பு மாத தொடக்கத்தில் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் கூடலூர் பகுதியில் இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாண்டியாறு, பல்மாடி, ஆத்தூர் உள்ளிட்ட தடுப்பணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மரங்கள் விழுந்தன
கூடலூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் சூசம்பாடி என்ற இடத்தில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் கூடலூர்-கேரளா சாலையில் அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுதகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு மரங்கள் அகற்றப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் பொதுமக்கள் தாமதமாக தங்களது ஊர்களுக்கு சென்றனர்.
இதேபோல் கூடலூர்-ஓவேலி சாலையில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.