மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
விருதுநகர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சிவகாசி
சிவகாசியில் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பயங்கர இடி- மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. சுமார் 30 நிமிடம் பெய்த இந்த திடீர் மழையினால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது.
மழையின் போது பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த சூறாவளி காற்றுக்கு சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு மரம் வேரோடு சரிந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த 2 மின்கம்பங்கள் மின் வயர் அழுத்தத்தால் முறிந்து சேதமடைந்தது.
மின்தடை
இதேபோல் போலீஸ் காலனியில் இருந்த 3 மின் கம்பங்களும் சேதமடைந்தது. 5 மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் மின் தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த மின் கம்பத்தில் இருந்த மின்சார கம்பிகளை அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சரி செய்தனர்.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை ஒன்றியம் மடத்துப்பட்டி, வன மூர்த்தி லிங்காபுரம், எட்டக்காபட்டி, தாயில்பட்டி, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, மண் குண்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
பலத்த காற்று வீசியதால் விளம்பர போர்டுகள் சாய்ந்து விழுந்தன. மடத்துப்பட்டி, எட்டக்காபட்டி ஆகிய தெருக்களில் இருந்த வேப்பமரங்கள் சாய்ந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெம்பக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் சாய்ந்த மரத்தை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் தடை செய்யப்பட்டது.
ராஜபாளையம்
அதேபோல ராஜபாளையத்தில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பழைய பஸ் நிலையம் அருகே காமராஜ் நகர், டி.பி. மில்ஸ் சாலையில் 2 மரங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாய்ந்த மரங்களை அகற்றினர். ராஜபாளையம் பொன்விழா மைதானம், காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் முக்கு போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த திடீர் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விருதுநகர்
விருதுநகரில் ேநற்று 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் ெரயில்வே பீடர் ரோடு, கச்சேரி ரோடு மற்றும் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் பலத்த இடியுடன் மழை பெய்ததால் நகரில் 3 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.