திருவாரூர் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கன மழை


திருவாரூர் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கன மழை
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் திருவாரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையில் அவ்வப்போது கோடை மழை பெய்தது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளே மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தது.

100 டிகிரியை தாண்டியது

திருவாரூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஒரு சில நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

இந்த வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இரவில் மின்விசிறி அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

பலத்த காற்றுடன் மழை

இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று மதியம் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

பின்னர் மாலை 4.45 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதையடுத்து பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழை 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, மேல திருப்பாலக்குடி, சவளக்காரன், பாமணி, அசேஷம், மூவாநல்லூர், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த கோடை மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. மாலை 6 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனையடுத்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பின்னர் இடி,மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதேபோல் லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வடபாதிமங்கலம், வேளுக்குடி, சித்தனங்குடி, மூலங்குடி, நாகங்குடி, பூந்தாழங்குடி, ராமநாதபுரம், குலமாணிக்கம், கோரையாறு, திருராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

மரங்கள் முறிந்து விழுந்தன

திருமக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி,மின்னல் மற்றும் காற்றுடன் பலத்த கனமழை பெய்தது.. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story