இடி-மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
வேலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
வேலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. அதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
வெயிலின் தாக்கம்
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
ஏப்ரல், மே மாத கோடை வெயிலை போன்று வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். அதனால் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க மழை பெய்யாதா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் காலை வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. மதியம் 12 மணியளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் குளிர்ந்தகாற்று வீசி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் மிதமாக பெய்த மழை, நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.
இடி, மின்னலுடன் பலத்த மழை
தொடர்ந்து இடி, மின்னலுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் மிதமான வேகத்தில் மழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகள், சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் பலத்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், பொதுமக்கள் பலர் குடைபிடித்தும் சென்றதை காண முடிந்தது.
வேலூர் மாநகராட்சியில் சில பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் பணிகள் நிறைவடையாததால் அங்கு மழைநீர் தேங்கி நின்றது. அதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கால்வாய் அடைப்பு காரணமாக வேலூர் தீயணைப்பு நிலையம் அருகே, மக்கான் சிக்னல் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் ஓடியது. சத்துவாச்சாரி வார்டு-19 அன்னை தெரசா தெரு மற்றும் வசந்தம்நகர் விரிவு பகுதிகளில் பொதுமக்களின் கால்முட்டி அளவிற்கு வெள்ளம் தேங்கி நின்றன. அதனால் பள்ளி மாணவர்கள், அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். மழைக்காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்புகளுக்குள் வெள்ளம்
வேலூர் சம்பத்நகர், கன்சால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது. சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது. பிளாஸ்டிக் பக்கெட்டுகள், அலுமினிய பாத்திரங்கள் மூலம் மழைநீரை பொதுமக்கள் வெளியேற்றினர்.
வேலூர் புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் வடக்கு பகுதியில் பயணிகள் நடந்து செல்லும் இடத்தில் கட்டிடத்தில் இருந்து திடீரென மழைநீர் ஒழுகி தேங்கியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.