இடி மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை


இடி மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை
x

பேரணாம்பட்டில் நேற்று இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யது. அப்போது மாடிவீட்டின் சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

வேலூர்

சூறைக்காற்றுடன் மழை

பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மதியம் 2.30 மக்கு மழை பெய்யத் தொடங்கியது. மாலையில் இடி மின்னல், சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணி வரை இந்த மழை நீடித்தது இதனால் கோடை வெப்பம் தணிந்தது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை காரணமாக பேரணாம்பட்டு நகரில் சுமார் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது

பேரணாம்பட்டு டவுன் முஹம்மதலி 2-வது தெருவில் தகர ஷீட் போட்ட வாடகை வீட்டில் ஓட்டல் தொழிலாளி அப்ரோஸ் வசித்து வருகிறார். இவரது மனைவி சம்ரின் (30), மகள்கள் ஷாபியா (11), ஆலியா (8), ஷாலியா (6), புஷ்ரா (4), ஆயிஷா (1) ஆகிய 6 பேர் நேற்று மழை பெய்தபோது வீட்டில் இருந்தனர்.

அப்போது பக்கத்தில் உள்ள பயாஸ் என்பவரின் வீட்டு மாடி பகுதியின் சுவர் திடீரென இடிந்து அப்ரோஸ் வீட்டின் தகர ஷீட் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதனையறிந்த அப்பகுதி 4-வது வார்டு தி.மு.க. செயலாளர் அப்துல் பாசித் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டார்.

2 சிறுமிகள் காயம்

இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஆலியா, சாலியா ஆகிய இருவருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த ஆலியா, சாலியா ஆகிய இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூறை காற்றினால் பேரணாம்பட்டு டவுன் பழைய ஆம்பூர் ரோட்டில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து அருகிலுள்ள பாஸ்கர் என்பவரின் தகர ஷீட் போட்ட வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாதாால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் பேரணாம்பட்டு டவுன் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் செனறு பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Next Story