நெல்லையில் இடி-மின்னலுடன் பலத்த மழை
நெல்லையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது. நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டிருந்தது.
இதேபோல் சுத்தமல்லி, கொண்டாநகரம், ஆரைக்குளம் உள்ளட நெல்லை மாநகரை சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. நேற்று பகலில் நாங்குநேரி பகுதியில் 17 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.