வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரியில் மலையோர பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை ; விவசாயிகள் மகிழ்ச்சி


வெயில் வாட்டி வதைத்த நிலையில் குமரியில் மலையோர பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை ; விவசாயிகள் மகிழ்ச்சி
x

குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பேச்சிப்பாறை உள்பட மலையோர பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பேச்சிப்பாறை உள்பட மலையோர பகுதிகளில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெயிலின் தாக்கம்

குமாி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 9 மணி முதலே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்குகிறது. இதைவிட கொடுமையாக இரவு நேரங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இடி-மின்னலுடன் மழை

இந்தநிலையில் நேற்று காலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகள், பாலமோர், மாறாமலை, ஆறுகாணி, பத்துகாணி, கோதையாறு, குற்றியாறு, களியல், திற்பரப்பு, குலசேகரம், திருநந்திக்கரை, சுருளகோடு உள்ளிட்ட மலையோர பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இப்பகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சாரல் மழையாகத் தொடங்கிய மழை பின்பு கன மழையாகி மாலை 5 மணிக்கு மீண்டும் சாரல் மழையாக பெய்து தணிந்தது. மழையின் காரணமாக பள்ளி மாணவர்கள் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பியதைக் காணமுடிந்தது. அதே வேளையில் ரப்பர் மரங்களில் தளிரிலைகள் துளிர்த்து வருவதால், மழையின் காரணமாக இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் மழை காரணமாக தேன் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மார்த்தாண்டம்

இதேபோல் திருவட்டார், குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், பூவன்கோடு, சாத்திரவிளை, தேமானூர், மாத்தூர், வீயன்னூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, புலியிறங்கி, திற்பரப்பு, மூவாற்று முகம், தோட்டவாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலையில் இருந்து மேகம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. ஒரு மழை பெய்யாதா என்று மக்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். மாலை 4 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது. மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

தக்கலை- நாகர்கோவில்

தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சாரல் மழையாக பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் சுமார் ½ மணிநேரம் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை 4 மணி அளவில் திடீரென இடியுடன் வானில் கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் 30 நிமிடங்கள் வரை லேசான சாரல் மழை பெய்தது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த சாரல் மழை சற்று ஆறுதலாக இருந்தது.

பூதப்பாண்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதன்படி இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், அருமநல்லூர், தெள்ளாந்தி, கடுக்கரை, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி, தாழக்குடி, செண்பகராமன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணிநேரமாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

மழையின் காரணமாக மாவட்டத்தில் தென்னை, வாழை, மரவள்ளி, அன்னாசி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story