நெல்லையில் இடியுடன் பலத்த மழை


நெல்லையில் இடியுடன் பலத்த மழை
x

நெல்லையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

பலத்த மழை

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று நெல்லையில் காலை முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு வரைக்கு மழை தூறிக்கொண்டே இருந்தது.

சுற்றுச்சுவர் இடிந்தது

நெல்லை சந்திப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. அதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துடன் சென்றனர்.

நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கடையநல்லூர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், அச்சன்புதூர், இடைகால், நயினாரகரம், கொடிகுறிச்சி, வடகரை, போகநல்லூர், வலசை, கம்பனேரி, மங்களாபுரம், காசிதர்மம், மேக்கரை, மற்றும் கடையநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நேற்று மதியம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வேத கோவில் தெரு, திருமாளிகை தெரு, கறிக்கடை தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணை பகுதியில் 37 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 44 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 22 மில்லி மீட்டரும் மழை கொட்டியது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 16.70 அடியாக இருந்த நிலையில் மேலும் 1 அடி உயர்ந்து 17.50 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 179 கன அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 38.68 அடியாக இருந்த நிலையில் நேற்று 1 அடி உயர்ந்து 39.73 அடியாக உள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 179 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து பாசனத்துக்கும், குடிநீருக்கும் 200 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

அம்பை -29, மணிமுத்தாறு -22, பாளையங்கோட்டை -47, பாபநாசம் -37, ராதாபுரம் -24, நெல்லை -12, சேர்வலாறு -44, கன்னடியன் கால்வாய் -9, மூலைக்கரைப்பட்டி -30.

செங்கோட்டை -1, சிவகிரி -1, தென்காசி -57, ராமநதி -13, கருப்பாநதி -12, குண்டாறு -11, அடவிநயினார் -1.


Next Story