சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை


சேலம் மாவட்டத்தில் பரவலாக கனமழை
x

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஓமலூர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஓமலூர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைவாக இருந்தது. இதனால் வெயிலின் அளவு 96.3 டிகிரியாக பதிவாகி இருந்தது. பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்தது.

பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

ஓமலூர்

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை ஓமலூர் காமலாபுரம், சிக்கனம்பட்டி, சக்கரசெட்டிப்பட்டி, தும்பிபாடி, பண்ணப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் பண்ணப்பட்டி பிரிவு ரோடு ஓமலூர்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிள்ள குடியிருப்பு பகுதிகளில் 10-க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

வீட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இதேபோல் சரக்கப்பிள்ளையூர், தின்னப்பட்டி பகுதிகளில் பலத்த மழைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இந்த மழையினால் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

தேவூர்

தேவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதுவும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைதண்ணீர் தேங்கி நின்றது. பருத்தி செடிகள் சாய்ந்தது. மேலும் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் ஆங்காங்கே சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கரியகோவிலில் 55 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஆணைமடுவு-28, தலைவாசல்-19, ஆத்தூர்-16, ஏற்காடு-15.6, பெத்தநாயக்கன்பாளையம்-13, சேலம்-12.6, வீரகனூர்-9, காடையாம்பட்டி-8, தம்மம்பட்டி-7, ஓமலூர்-7, கெங்கவல்லி-5, மேட்டூர்-3.2, எடப்பாடி-3, சங்ககிரி-2.2 ஆகும்.


Next Story