குமரியில் சாரல் மழை நீடிப்பு


குமரியில் சாரல் மழை நீடிப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் சாரல் மழை நீடிப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் ஊழியர்கள் கையில் குடைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் நாகர்கோவில்-1.2, பேச்சிப்பாறை-1, தக்கலை-0.2, மாம்பழத்துறையாறு-3.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

மிதமான மழை பொழிவு இருப்பதால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 471 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 583 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

சாரல் மழையாகவே...

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அது வெறும் சாரல் மழையாகவே பெய்கிறது. பலத்த மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அணைகளுக்கு தண்ணீர் போதிய அளவு வராததால் பலத்த மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

சாரல் மழையாகவே பெய்வதால் முக்கடல் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. 25 அடி கொள்ளளவும், மைனஸ் 25 அடியும் கொண்ட முக்கடல் அணை நேற்று வெறும் மைனஸ் 10.90 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. அதுவும் வேக வேகமாக குறைந்து வருகிறது. எனவே அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வேண்டி பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

சாரல் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.


Next Story