'மாண்டஸ்' புயலால் கனமழை: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு


மாண்டஸ் புயலால் கனமழை: பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு
x

‘மாண்டஸ்’ புயல் காரணமாக கனமழை பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்ததை தொடர்ந்து கடந்த மாதத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதை அடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவானதை அடுத்து கடந்த 2 நாட்களாக திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

உபரிநீர் திறப்பு

நேற்று பலத்த மழை பெய்ததையடுத்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.05 அடியாக பதிவாகியது. 2.533 டி.எம்.சி. இருப்பு இருந்தது. கனமழை நீடிப்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மதியம் 12 மணியளவில் பூண்டி ஏரியில் இருந்து முதல் கட்டமாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்திய நாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் 11-ம் எண் கொண்ட மதகு வழியாக தண்ணீர் திறந்து விட்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 100 கன அடி, கிருஷ்ணாநதி நீர் வினாடிக்கு 525 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 38 கன அடி வீதம் தண்ணீர் பேபி கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து தண்ணீர் வெளியேறும் கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சோழவரம்

இதேபோல் பலத்த மழை காரணமாக சோழவரம் ஏரிக்கு 36 கன அடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டி.எம்.சி. ஆகும். இதில் 539 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

கண்ணண்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடி முழுவதுமாக நிரம்பி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

மேலும், கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் ஏரியிலிருந்து நேற்று முதல் கட்டமாக 100 கன அடி நீரை திறக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று மதியம் 5 கண் மதகில் 3-வது செட்டர் வழியாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

3-வது முறையாக..

இந்த ஆண்டில் தற்போது 3-வது முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 20.37 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,695 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 709 கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகளும் தற்போது நிரம்பி உள்ளதால் அதிக அளவில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மதகு சேதம் அடையும் ஆபத்து

மாண்டஸ் புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஏரி நீரில் அலைகள் எழும்பி மதகுகளின் செட்டர்கள் மற்றும் கரைகளின் மீது பலத்த சத்தத்துடன் ஆவேசமாக மோதியது. இதனால் உபரிநீர் சென்ற 3-வது இரும்பு செட்டர் சுவரில் தண்ணீர் மோதி சத்தம் எழுப்பியதால் செட்டர் உடைந்து சேதம் அடையும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 கண் மதகு வழியாக வெளியேறிய உபரி நீரை உடனடியாக நிறுத்தினார்கள். அதற்கு பதிலாக 19 கண் மதகில் உள்ள ஒரு செட்டரின் வழியாக 100 கன அடி உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர்.

அதிக அளவு உபநீரை வெளியேற்றும் வகையில் உள்ள 5 கண் மதகில் காற்றின் வேகத்தால் நீர் அதிக அளவில் மோதி சேதம் அடையாமல் இருப்பதற்காக தற்காலிகமாக 5 கண் மதகின் செட்டர் மூடப்பட்டு 19 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புழல் ஏரி

இதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் தற்போது 2,386 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருவதால் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று மதியம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2 செட்டர்கள் கொண்ட ஏரியில் ஒரு செட்டர் வாயிலாக உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்த உபரிநீர் செங்குன்றம் சாமியார் மடம், வடகரை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல் வழியாக எண்ணூர் கடலை சென்றடைகிறது. புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உபரிநீர் திறப்பின் போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் பொதுப்பணி துறையினர் இருந்தனர்.


Next Story