கூத்தாநல்லூர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை


கூத்தாநல்லூர் பகுதியில் விடிய,விடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்,:

கூத்தாநல்லூர் பகுதியில் விடிய,விடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மாண்டஸ் புயல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் மழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்தும் உள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின்போதும் மழை பெய்தது. இதனால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதை தொடர்ந்து மழை நின்றதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து, நெற்பயிர்களுக்கு பூச்சி மருந்து, உரம் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுவந்தனர்.

விடிய,விடிய பலத்த மழை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிஉருவானது. இது படிப்படியாக நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. நேற்று முன்தினம் மாலையில் சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவில் பெய்த பலத்த மழை விடிய,விடிய நீடித்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்கள் மற்றும் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கியது.

இதேபோல் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, கோரையாறு, பொதக்குடி, பூதமங்கலம், வடபாதிமங்கலம், நாகங்குடி, ஓவர்ச்சேரி, பண்டுதக்குடி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, சித்தாம்பூர், குடிதாங்கிச்சேரி, பூந்தாழங்குடி, அரிச்சந்திரபுரம், ராமநாதபுரம், குலமாணிக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீடாமங்கலம் கடைவீதியில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இரவில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


Next Story