நீலகிரியில் கனமழை: பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீலகிரியில் கனமழை:  பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு  பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு

நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும்.

இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

முன் கூட்டியே தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 322 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story