பணகுடி அருகே கனமழை: ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்பு;
பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரின் கதி என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பணகுடி:
பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 பேரின் கதி என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னிமார் தோப்பு ஓடை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி உள்ளது. இதில் இருந்து வரும் தண்ணீர் அருகில் உள்ள கன்னிமார் தோப்பு ஓடை வழியாக செல்கிறது. இந்த ஓடையில் தினமும் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் கன்னிமார் தோப்பு ஓடையில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது. இதில் நேற்று கூடங்குளம், கூத்தன்குழி, பணகுடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துச் கொண்டு இருந்தனர்.
வெள்ளத்தில் சிக்கினர்
அப்போது, பணகுடி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஓடையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெவ்வேறு திசைகளில் சிதறி ஓடி மாற்றுப்பாதை வழியாக கரை சேர்ந்தனர்.
எனினும் வெள்ளத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்த மார்ஷல், ெரமோஜா, ஷாஜி, ஷகின், விநாயகம், சிமோஸ், நல்லூைரச் சேர்ந்த சரவணன் உள்பட 10 பேர் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், பணகுடி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மாவட்ட அலுவலர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
8 பேர் மீட்பு
வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 8 பேரை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே விநாயகம், சரவணன் ஆகியோர் திடீரென்று மாயமாகினர். அவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2 பேரின் கதி என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அதிகாரிகள் விரைந்தனர்
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஷபீர் ஆலம், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் பணகுடி பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.