சென்னையில் கடும் கடல் சீற்றம்... மெரினா கடற்கரை வெறிச்சோடியது


சென்னையில் கடும் கடல் சீற்றம்... மெரினா கடற்கரை வெறிச்சோடியது
x

சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது.

சென்னை,

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. இதை தொடர்ந்து மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

புயலுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகமாக செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலோர பகுதிகளில் காணப்பட்டனர். அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரித்ததை காண முடிந்தது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் சில மீன் கடைகளே செயல்பட்டன. பெரும்பாலான மீனவர்கள் கடைகளை திறக்காமல் மூடியே வைத்திருந்தனர்.

புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசுகிறது. படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விடக்கூடும் என்பதால் கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். சென்னை மாநகர் முழுவதுமே குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது.


Next Story