நாகை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
நாகை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
நாகை மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நாகை, வேளாங்கண்ணி, கீவளூர், திருமருகல், நாகூர், விழுந்தமாவடி, திட்டச்சேரி, வலிவலம், திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நாகை மாவட்டத்தில் கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் கோவில் மற்றும் ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த பனிப்பொழிவால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வாகனத்தில் வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். நாகை- காரைக்கால் சாலை, நாகை - திருவாரூர் சாலை, நாகை- திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் நேற்று காலை 8.30 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர். இதேபோல் மீனவ கிராமங்களில் இருந்து தங்களது படகில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பனிப்பொழிவின் காரணமாக மீன்பிடிக்க செல்ல சிரமப்பட்டனர்.