பலத்த காற்றிலும் மகசூல் இழப்பை தடுக்க வாய்ப்பு
பலத்த காற்றிலும் மகசூல் இழப்பை தடுக்க வாய்ப்பு
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் பலத்த காற்று, கன மழை ஆகியவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து மகசூல் இழப்பைத் தடுக்க கைகொடுக்கும் வகையில் மானியத்திட்டங்கள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காற்றின் வேகம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழவகைப் பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் காற்று மற்றும் கனமழைக் காலங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து மகசூல் இழப்பைத் தவிர்க்கும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-
உடுமலை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழ்நிலையில் வாழை சாகுபடியில் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முட்டு கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.அதுபோல பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை தற்காலிக பந்தல் அமைத்து சாகுபடி செய்யலாம்.
நல்ல விலை
தக்காளி சாகுபடியில் கனமழைக் காலங்களில் பயிர் மற்றும் பழங்கள் சேதமடைந்து பெரும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தற்காலிக பந்தல் அமைத்து தக்காளிச் செடிகளை கொடி போல உயர்த்திக் கட்டி சாகுபடி மேற்கொள்ளலாம். இந்த முறையின் மூலம் கனமழைக் காலங்களில் ஏற்படும் இழப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. இதனால் மகசூல் அதிகரிப்பதுடன் செடிகளின் ஆயுட்காலம் அதிகரித்து நீண்ட நாட்கள் பலன் தருகிறது. இந்த முறையின் மூலம் விளைவிக்கப்படும் பழங்கள் திரட்சியாகவும், மினுமினுப்பாகவும் காணப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வாழைக்கு முட்டுக்கொடுத்தல், பந்தல் காய்கறிகளுக்கு தற்காலிக பந்தல் அமைத்தல், கொடித் தக்காளி சாகுபடி உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு உடுமலை வட்டாரத்துக்கு 250 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், உள்ளிட்ட ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்'என்று அதிகாரிகள் கூறினர்.