குடியாத்தம் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
குடியாத்தம் கெங்கயம்மன் கோவில் தரை பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடியாத்தம் கெங்கயம்மன் கோவில் தரை பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து தடை
குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றை கடத்து செல்ல காமராஜர் பாலம் மற்றும் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோர்தானா அணை நிரம்பி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தின் மேல் மேல்வெள்ளம் செல்கிறது.
வினாடிக்கு 1,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் செல்வதால் கெங்கையம்மன் தரைப்பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெரிசல்
நேற்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம், அர்ஜுனன் முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார் வரை வாகனங்கள் அணிவகுந்து நின்றன. இதனால் குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது.
உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி பெரியார் சிலை அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.
தமிழக அரசு உடனடியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை, மேம்பாலமாக உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.