வேப்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகையையொட்டி அணிவகுத்த வாகனங்களால் வேப்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையில் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்தார்.
வேப்பூர்,
தைதிருநாளான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊருக்கு கார் மற்றும் பஸ்களில் அதிகளவில் புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
இதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ்நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வேப்பூர் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் செல்லும் சூழ்நிலை உள்ளது. வாகனங்கள் அதிகளவில் சென்றதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு ஆரோக்கியராஜ் தலைமையில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் சந்திரா பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் வேப்பூர் கூட்டுரோடு, வேப்பூர் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திட போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.