சிவகாசி பஸ் நிலையம் அருகில் கடும் போக்குவரத்து நெரிசல்
குறுகலான பாதையில் மின்கம்பம் பொருத்தும் பணி நடைபெறுவதால் சிவகாசி பஸ்நிலையம் அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிவகாசி,
குறுகலான பாதையில் மின்கம்பம் பொருத்தும் பணி நடைபெறுவதால் சிவகாசி பஸ்நிலையம் அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடும் நெரிசல்
சிவகாசி பஸ் நிலையம் உள்ள காந்திரோட்டில் இருந்து வெம்பக்கோட்டை முக்கு வரை 1 கி.மீ. தூரத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அலங்கார மின் விளக்கு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற மாநகராட்சிகளில் 80 அடி முதல் 100 அடி வரை உள்ள சாலைகளில் இந்த அலங்கார மின் விளக்கு அமைக்கப்பட்டு வரும் நிலையில் சிவகாசி 50 அடி சாலையில் இந்த அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் அந்த பகுதியை கடந்து செல்ல வாகனங்கள் தற்போது பெரும் சிரமத்துக்குள்ளாகிறது. அதிலும் குறிப்பாக பஸ் நிலையத்தின் வெளியே ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வெளியேறும் பகுதியில் மினி பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் அந்த பகுதியை கடந்து பஸ்கள் செல்ல முடியாமல் திணறி வருகிறது.
அடிக்கடி விபத்துக்கள்
மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்படுவதில்லை. இதனால் காந்திரோட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள வர்த்தக கட்டிடங்களில் பொரும்பாலும் வாகன நிறுத்தங்கள் இல்லாத நிலையில் அனைத்து வாகனங்களும் காந்திரோட்டில் பல்வேறு பகுதியில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாத்தூர் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் வராமல் காந்தி ரோடு செல்ல சாலை வசதி இருந்தும் அதனை மாநகராட்சி நிர்வாகம் மேம்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் மயானத்தின் அருகில் உள்ள மாநகராட்சி சாலையை சரி செய்து வாகனங்கள் அந்த வழியாக செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.