மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 508 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 508 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 508 மனுக்களை பெற்ற கலெக்டர் அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சித்தலிங்கமடத்தை சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவருக்கு சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.