கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 312 மனுக்கள் குவிந்தன
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 312 மனுக்கள் குவிந்தன.
இந்து முன்னணி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். இதில் 312 மனுக்கள் குவிந்தன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் விடுமுறை நாட்களில் சிலர் மதமாற்ற பிரசாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து மதமோதல்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
பார்வையற்ற தம்பதி
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேனி அலுவலகத்தில் பணியாற்றும் தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்களாக பணியாற்றும் 620 பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். எங்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. வருடாந்திர ஊதிய உயர்வும் 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. வேறு துறைக்கு மாற்றுவதாக இருந்தால் ஊதிய குறைப்பு, பணி நிலை குறைப்பு இல்லாமல் மாற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
மயிலாடும்பாறையை சேர்ந்த பார்வையற்ற தம்பதியான பரமன்-ஜோதி தங்களின் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீட்டை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடித்து விட்டனர். கலெக்டர் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும். தற்போது ஊர் மக்கள் ஆதரவுடன் வேறு இடத்தில் தற்காலிக குடிசை அமைத்து வாழ்கிறோம். எங்களுக்கு இருக்க இடமும், வாழ்வாதாரமும் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில், "டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த இளையராஜா என்பவரின் வீட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்தது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.