அரசு அலுவலகங்களுக்கு வரும்போது ஹெல்மெட் கட்டாயம்
அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
குமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வுக்கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெடுஞ்சாலை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மார்ச் மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபத்து நடைபெற்ற பகுதிகளான தேவசகாயம் மவுண்ட் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை, வெள்ளமடம் தேசிய நெடுஞ்சாலை இணைப்புசாலை, மாதவலாயம் விலக்கு போன்ற பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரு விளக்கு அமைத்திட...
விபத்துக்கள் நடைபெற காரணம் பெரும்பாலும் சாலை விதிகளை பின்பற்றாமல் இருப்பதே ஆகும். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்குவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக இரைச்சலுடன் செல்கின்ற இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யவும், இருச்சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சாலைகளில் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் தெரு விளக்கு அமைத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளங்களை சரிசெய்து சாலையை சீரமைக்க குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஹெல்மெட் கட்டாயம்
மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும். சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்லும் போது நடைபாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் ஏற்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குழுக்களை தொடர்ந்து செயல்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணிய கேல்கார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ஜெரால்டு ஆன்றனி, உதவி கோட்டப்பொறியாளர் (சாலை பாதுகாப்பு) சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.