சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஏற்பாடு


சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஏற்பாடு
x

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஏற்பாடு

திருப்பூர்

திருப்பூர்

மத்திய அரசு நிறுத்தினாலும், சிறுபான்மை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாவட்ட சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் வினீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

இஸ்லாமிய, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களை கூடுதலாக அமைக்கலாம். சங்கத்தின் பங்களிப்பாக ரூ.10 லட்சம் கொடுத்தால் அரசின் சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும். அடக்கஸ்தலத்துக்கு இடம் தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே உள்ள அடக்கஸ்தலத்துக்கு அருகே உள்ள தனியார் இடத்தை வாங்க நீங்கள் பேசி ஒப்புதல் பெற்றால் அதற்கான தொகையை அரசு செலுத்தும்.

ஊக்கத்தொகை

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்கள். ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிறுபான்மை மக்களின் நலன் கருதி, 3-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000-ம் தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்காக, முதல்-அமைச்சர் தனி உத்தரவு வழங்கி உள்ளார். மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்கள் விவரங்களை தெரிவித்து, அதற்கான நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மொத்தம் 55 பேருக்கு ரூ.31 லட்சத்து 87 ஆயிரத்து 797 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

முன்னதாக அவினாசி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்களை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story