சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவிட வேண்டும்


சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவிட வேண்டும்
x

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு அச்சமின்றி உதவிட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நற்கருணை வீரன் சான்று

சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கக் கூடிய நபரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து உயிர்காப்பு செய்பவர்களுக்கு அரசு பரிசுத்தொகை ரூ.5,000 மற்றும் நற்கருணை வீரன் என்ற நற்சான்றும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை காப்பாற்றும் நோக்கிலும், தேவையற்ற அச்சங்களை அகற்றிடவும், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதாகும்.

இந்த திட்டத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரின் உயிரைக் காக்கும் வகையில் உடனடியாக செயல்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க உதவிடும் தனிமனிதனை ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு பரிசுதொகை ரூ.5,000 மற்றும் நற்கருணைவீரன் என்ற அரசின் பாராட்டு சான்றும் வழங்கப்படும்.

அச்சமின்றி...

இத்திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 முறை இச்சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந்தேதி மாநில அளவிலான கண்காணிப்புக்குழு பரிந்துரையின் பேரில் 3 தகுதி வாய்ந்த நபருக்கு தேசிய அளவிலான விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெறவும் பரிந்துரைக்கப்படும்.

இத்திட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் வரை செயல்முறையில் இருக்கும்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர்காக்கும் சிகச்சை பெற உதவிட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் இறப்போர் எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மேலும் இச்செயலை செய்யும் நபர்கள் மேற்கூறிய பரிசுப் பொருட்களை பெற சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story