குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற வழிகாட்டுதல் குழு


குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற வழிகாட்டுதல் குழு
x

குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணைய முறையில் விண்ணப்பம்

குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும். குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி வழியாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்தவுடன் விவசாயிகளின் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இந்த எண்ணை விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களிடம் உடனடியாக தெரிவித்தால்தான் அவர்களுடைய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியும்.

வழிகாட்டும் குழு

இவ்வாறு இணைய முறையில் விண்ணப்பம் செய்வதில் ஏற்படும் நடைமுறை இடர்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த உதவி மையங்களில் விவசாயிகளுக்கு வழிகாட்டும் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்களுடைய சிட்டா, அடங்கல் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வந்தால் மையத்தில் உள்ள வழிகாட்டும் குழுவினர் விவசாயிகளின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உடனடியாக ஒப்புதல் அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

சிறப்பு ஏற்பாடு

விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் சிரமமின்றி உரங்கள் பெறுவதற்கு திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இத்தகைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு குறுவை தொகுப்பு திட்டத்தில் உரங்களை பெற்று பயன்பெற வேண்டும்.

இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு விவசாயிக்கு மட்டும் ஒரு ஏக்கருக்கான உரங்கள் வழங்கப்படும். எனவே தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் உடனடியாக சிட்டா, அடங்கல் பெற்று அத்துடன் ஆவணங்களையும் கொண்டு வந்து உடனடியாக பலன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story