தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய நாட்டுக்கோழி சந்தை
சேதுபாவாசத்திரம் அருகே தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டுக்கோழி சந்தை களை கட்டி உள்ளது. 2 கிலோ எடையுள்ள கோழி ரூ.1,000-த்துக்கு விற்கப்படுகிறது.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டுக்கோழி சந்தை களை கட்டி உள்ளது. 2 கிலோ எடையுள்ள கோழி ரூ.1,000-த்துக்கு விற்கப்படுகிறது.
நாட்டுக்கோழி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு வசதியாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி இங்குள்ள பெண்கள் அதிகம் பேர் தங்கள் வீடுகளில் சிறு தொழில் போல அதிகமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர்.இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது போக மீதம் உள்ள கோழிகள் அதிக அளவில் தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்வதுடன் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் பண்டிகைகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்து விடும்.
மொத்த விற்பனை
இதனால் நாட்டுக்கோழி வளர்ப்பை கிராம பகுதி பெண்கள் அதிகம் விரும்பி செய்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தைபோல பூக்கொல்லை கடைவீதியில் கோழி மட்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இங்கு சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் கோழி விற்பனை செய்யவும் வாங்குவதற்கும் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி ஏற்றி சென்றுவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதில் 2 கிலோ எடையுள்ள கோழி ரூ.1,000-த்துக்கு விற்கப்படுகிறது.
விற்பனை களை கட்டியது
இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனைக்காக வீடுகளில் வளர்த்து வந்த கோழிகள், கோழி கழிச்சல் போன்ற நோயினால் அதிகமாக உயிரிழந்து விட்டன. இருப்பினும் நோயில் இருந்து தப்பித்த கோழிகள் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவு பூக்கொல்லைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பூக்கொல்லையில் நாட்டுக்கோழி விற்பனை களை கட்டி உள்ளது.