பாரம்பரிய நெல் ரகங்களை கேப்சூல் முறையில் சாகுபடி செய்யும் விவசாயி
குத்தாலம் அருகே பாரம்பரிய நெல் ரகங்களை கேப்சூல் முறையில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார். இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான 2½ கிலோ விதைநெல்லை(கேப்சூல்முறையில்) உருவாக்க 3 நாட்கள் ஆகிறது.
குத்தாலம், ஜூன்.5-
குத்தாலம் அருகே பாரம்பரிய நெல் ரகங்களை கேப்சூல் முறையில் விவசாயி ஒருவர் சாகுபடி செய்து வருகிறார். இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான 2½ கிலோ விதைநெல்லை(கேப்சூல்முறையில்) உருவாக்க 3 நாட்கள் ஆகிறது.
பாரம்பரிய நெல் ரகங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது51). எம்.காம்., பி.எட்., விவசாயத்தில் டிப்ளமோ உள்ளிட்ட பல பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளை படித்துள்ள இவர் விவசாயத்தை மட்டுமே விரும்பி செய்து வருகிறாா். இவர் கந்தமங்கலம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 9 ஆண்டுகளாக விவசாய பணிகளை செய்து வருகிறார்.இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வயலில் கருப்பு கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வரும் விவசாயி ராஜசேகர் ஒவ்வொருமுறையும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறார்.
கேப்சூல் முறை
இது குறித்து விவசாயி ராஜசேகர் கூறியதாவதுஇந்த ஆண்டு எனது ஒரு ஏக்கர் நிலத்தில் 60-ம் குறுவை நெல் ரகத்தை கேப்சூல் முறையில் நடவு செய்துள்ளேன். இதற்காக கடலைப்புண்ணாக்கு, இலுப்பை, வேப்பம்புண்ணாக்கு, பயிர் வளர்ச்சி ஊக்கிகள்(பிளாண்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ்) ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதத்தில் கலந்து உரமாக்கி அதனை ஒரு கேப்சூலில் அடைத்து அதனுடன் 3 நெல் விதைகளையும் சேர்த்து வைத்து மூடி வைக்க வேண்டும்.பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ விதை நெல்தேவைப்படும். கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் 2½ கிலோ விதைநெல் மட்டும் போதுமானது.
3 நாட்கள்
இந்த கேப்சூல் விதைகளை சற்று ஆழமாக வயலில் விதைக்கும் போது கேப்சூல் சுமார் ½ மணி மணி நேரத்தில் கரைந்து அதற்குள் இருக்கும் உரங்கள் மற்றும் விதை நெல் மண்ணில் கலந்து விடும். ஒரு எக்கருக்கு தேவையான 2½ கிலோ விதை நெல்லை உருவாக்க 3 நாட்கள் ஆகும். இந்த பணியில் 3 முதல் 4 பேர் வரை ஈடுபடுத்தப்படுகிறார்கள்.சாதாரண முறையில் பயிர்கள் வளர 110 நாள் ஆகும். ஆனால் கேப்சூல் முறையில் சாகுபடி செய்யும் போது 90 நாட்களில் பயிர்கள் வளரும். இவ்வாறு அவர் கூறினார். ராஜசேகரின் புதுமையான இந்த முயற்சியை சக விவசாயிகள் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றனர்.