குமரிக்கு அதிவிரைவுப்படை வருகை
குமரி மாவட்டத்தில் கலவரங்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிய அதிவிரைவுப் படையினர் வந்துள்ளனர். இவர்கள் 4 நாட்கள் தங்கிருந்து ஆய்வு செய்கிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கலவரங்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிய அதிவிரைவுப் படையினர் வந்துள்ளனர். இவர்கள் 4 நாட்கள் தங்கிருந்து ஆய்வு செய்கிறார்கள்.
சிறப்பு படை
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிவிரைவுப்படை (ஆர்.ஏ.எப்.) என்ற சிறப்பு படை செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு படையானது மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கீழ் செயல்படுகிறது. இந்த சிறப்பு படையினர் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக சென்று கலவரங்கள் மற்றும் கலவரம் போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க போலீசாருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் அறிவுரைகளை வழங்குவார்கள்.
இந்த நிலையில் அதிவிரைவுப்படையினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். மொத்தம் 80 பேர் கொண்ட குழுவாக இந்த சிறப்பு படை வந்துள்ளது. முதலில் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களது வருகை குறித்து பதிவு செய்தனர். இந்த சிறப்பு படையினர் நாகர்கோவில், குளச்சல், தக்கலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஒவ்வொரு போலீஸ் துணை சரகம் வாரியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
ஆய்வு
ஒவ்வொரு சரகங்களிலும் கலவரங்கள் ஏற்படும் இடங்களை கேட்டறிந்து அங்கு சென்று ஆய்வு செய்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியில் கலவரம் ஏற்பட்டால் அது எவ்வாறு ஏற்படும்? கலவரம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி? கலவரம் ஏற்பட்டுவிட்டால் அதை சமாளிப்பது எப்படி? என்றெல்லாம் ஆராய்ந்து அதை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக கூறுவார்கள்.
இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குமரி மாவட்டத்தில் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களை நேரடியாக பார்வையிட உள்ளார்கள். குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் முக்கியமாக மண்டைக்காடு கலவரம் தொடர்பான தகவல்களை சிறப்பு படையினர் கேட்டறிந்து அதுதொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். இந்த சிறப்பு படையினர் 4 நாட்கள் வரை மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வு செய்வார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.