தென்மாவட்டங்களில் பயிரிட ஏற்ற அதிக மகசூல் தரும் நெல் விதைகள்-மதுரை வேளாண் கல்லூரி தகவல்
தென்மாவட்டங்களில் பயிரிட ஏற்ற அதிக மகசூல் தரும் நெல் விதைகள் குறித்து மதுரை வேளாண் கல்லூரி தகவல் தெரிவித்தது
தென்மாவட்ட விவசாயிகளின் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் ஆராய்ச்சி மையமாகவும், வேளாண் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகவும், மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வகையில் தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் தென்மாவட்ட நெல் சாகுபடியாளர்கள் பயன்பெரும் வகையில் 2-ம் போக சாகுபடிக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் நெல் ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. விதைகள் அனைத்தும் ஆதாரநிலை, சான்று மற்றும் உண்மை நிலை என பல பிரிவுகளில் தரச்சான்று பெற்ற விதைகள் ஆகும். எனவே விசாயிகள் மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனைக்குள்ள கீழ்க்கண்ட நெல் ரக விதைகளை பெற்று, பயிரிட்டு அதிக பலன்களை பெறலாம். சான்றளிக்கப்பட்ட நெல் ரக விதைகளான ஏ.டீ.டி-54, கோ-51, ஏ.எஸ்.டி-16, ஏ.டீ.டி-37 ஆகியவை 30 கிலோ கொண்ட பைகளில் கிடைக்கும். ஆதாரவிதைகள் மற்றும் இதர சான்று அளிக்கப்பட்ட தரத்திலான விதைகள் 30 கிலோ விதை கொண்ட பைகளில் கிலோ ரூ.44 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வலைதளை பணப்பரிமாற்றம் மூலமும் விவசாயிகள் விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை மதுரை வேளாண் கல்லூரி பேராசிரியர் ராகவன் தெரிவித்துள்ளார்.