உயர்கல்வியே மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு
உயர்கல்வியே மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கடலூரில் நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கடலூர் கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், முதல்-அமைச்சரின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, மாணவர்களின் வாழ்வில் 12-ம் வகுப்பிற்கு பின் படிக்கும் உயர்கல்வி, அவர்களது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் குறித்தும், வங்கி மற்றும் வங்கிக்கடன் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்பினை அனைவரும் பெறும் வகையில் தமிழக அரசு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
நான் முதல்வன்
மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் நான் முதல்வன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நான் முதல்வன் இணைய முகப்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் மூலமாக பெறக்கூடிய 300-க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர் கல்விக்கான உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் நான் முதல்வன் இணைய முகப்பில் இடம் பெற்றுள்ளன. மாணவர்களுக்கு இத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலகத்தரம் வாய்ந்த கல்வி
எனவே அனைவரும் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முதல்-அமைச்சரால் நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.