அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இதில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 200 பேர் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு சென்று மாணவர்கள் பார்வையிட்டனர். இதில் கல்லூரியில் உள்ள 16 துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று உயர்கல்வியில் முக்கியத்துவம், கல்லூரியின் செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கையில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.
தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் 20 மாணவர்களுக்கு ஒருவர் என கல்லூரியில் உள்ள தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணிப்பொறியியல், இயற்பியல், வேதியியல் ஆய்வகங்களுக்கு அழைத்து சென்றனர். நிகழ்ச்சியை பாரதிதாசன் பல்கலைக்கழக திருவாரூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர்- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். இதற்கான ஏற்பாடுகளை .நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சத்யா தேவி, ஜென்னி, ராஜ்குமார், பேராசிரியர் லில்லி ஆகியோர் செய்திருந்தனர்.