மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
குமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள கன்கார்டியாபள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் என்ன படிக்கலாம்? அதன் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் துணையுடன் நடக்கிறது.
வேலைவாய்ப்பு
குறிப்பாக மருத்துவத்துறை, பொறியியல் துறையை மட்டுமே பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்வு செய்கின்றனர். ஆனால் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளதோடு, அதனை படித்தாலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் என்ற இணையதளத்தினை உருவாக்கியுள்ளார்கள். அதன் மூலம் பல்வேறு பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் டி.என்.பி.எஸ்.சி மற்றும் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகள், பல்வேறு தொழில்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் நாகராஜன், முன்னாள் துணை வேந்தர் காளியப்பன் மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் தலைவர் சுதர்மன், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.