நாட்டின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் உயர் கல்வி அவசியம்


நாட்டின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் உயர் கல்வி அவசியம்
x

நாட்டின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என்று வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.

வேலூர்

புகைப்பட கண்காட்சி

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து 5 நாட்கள் நடைபெறும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வேலூரில் நேற்று தொடங்கியது. இதனை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் காமராஜ், வேலூர் கள விளம்பர அலுவலர் முரளி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உயர்கல்வி அவசியம்

நிகழ்ச்சியில் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

இந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர். அவர்களின் விபரம் நமக்கு தெரியவில்லை. அவர்கள் மூலம்தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர்களை நாம் நினைவு கூற வேண்டும். 2022-ம் ஆண்டு விவரப்படி நாம் உலகின் பொருளாதார நாடுகளில் 5-வது இடத்தில் உள்ளோம். நாம் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உள்ளோம். அதே நேரத்தில் யாரை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறோமோ அவர்களின் மக்கள் தொகை 7 கோடிக்கும் குறைவு. ஆனால் நம் நாட்டில் 140 கோடி மக்கள் தொகை உள்ளது. அவர்களின் தனிநபர் வருமானத்தை ஒப்பிடும்போது நம்முடைய தனிநபர் வருவாய் மிகக்குறைவு.

நாட்டில் பெரும் கோடீஸ்வரர்களாக உள்ள ஒரு சதவீதம் பேர் 40 சதவீத அளவுக்கு சொத்துக்களை வைத்துள்ளனர். எனவே நாடு வளர்ச்சி அடைய இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் களைய அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வியில் நாம் பின்தங்கியுள்ளோம். எனவே மத்திய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளும் இதில் அக்கறை செலுத்த வேண்டும். மக்களின் வளர்ச்சி முக்கியம். அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இலவசங்கள் கொடுப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story