ஹைவேவிஸ் மலைப்பகுதியில்இரவங்கலாறு அணையில் நீராடிய காட்டுயானை
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இரவங்கலாறு அணையில் காட்டுயானை நீராடியது.
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு மேகமலை, மணலார், மேல்மணலார், இரவங்கலாறு ஆகிய மலை கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிப்பதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ் மலை பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டுயானைகள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து தேயிலை செடிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஜா மெட்டு மற்றும் இரவங்கலாறு, வெண்ணியாறு ஆகிய கிராமங்களில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது. இந்நிலையில் அந்த யானை நேற்று முன்தினம் இரவங்கலாறு அணையில் நீண்ட நேரம் நீராடியது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து சென்றனர்.